
கோலாலம்பூர், மே 8: மருந்து விலையை குறைக்கும், புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளை விரைவாக்கும், மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் தேவைகளுக்கேற்ப சிகிச்சைகளை உருவாக்கும் நோக்கில், மலேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (Clinical Research Malaysia – CRM) மற்றும் பிற தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆசியாவின் (ASEAN) பிற நாடுகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
இன்று நடைபெற்ற CRM Trial Connect Conference 2025 நிகழ்ச்சியில் பேசிய அவர், “மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் என்பது முக்கிய சவால்களில் ஒன்றாகும். சில பெரிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும் போதிலும், பொதுமக்கள் மீது ஏற்படும் சுமையை கவனிக்கவில்லை,” என தெரிவித்தார்.
CRM நிறுவனம், உள்ளூர் பல்கலைக்கழகங்கள், குறிப்பாக மருத்துவ துறைகளுடன் இணைந்து வேலை செய்ய வேண்டியதின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துக்காட்டினார்.
பினாம்பென், வியன்டியன், சிங்கப்பூர், ஜகார்த்தா, பாங்கொக், மணிலா போன்ற நகரங்களில் உள்ள முக்கிய ஆராய்ச்சி மையங்களுடன் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு, தொலைநோக்கான வளர்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சூல்கெஃப்லி அகமட் மற்றும் சரவாக் துணை முதலமைச்சர் டத்தோ அமர் டாக்டர் சிம் குய் ஹியான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
-யாழினி வீரா