
படம் : கூகுள்
டெல்லி, 4 ஏப்ரல்- கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முறைகேடான முறையில் ஆசிரியர் நியமனங்கள் நடந்திருப்பதால் இது மோசடிக்குச் சமம் என்று தெரிவித்தது. நீதிபதிகள் கூறுகையில், “முறைகேடாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிடுவதற்கு சரியான காரணம் எதையும் நாங்கள் இதில் காணவில்லை. பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டிருப்பதால் இது ஒரு மோசடியாகும்.” என்று தெரிவித்தது.
மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016-ம் ஆண்டில் மாநில பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. மொத்தமுள்ள 24 ஆயிரத்து 640 ஆசிரியர் பணியிடங்களுக்கு 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 25 ஆயிரத்து 753 பேருக்கு ஆசிரியர் பணிக்கான நியமன ஆணையை மாநில அரசு வழங்கியது.
இந்த ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், பலர் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலை பெற்றதாகவும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ல் தீர்ப்பு வழங்கிய கொல்கத்தா உயர் நீதிமன்றம், 25 ஆயிரத்து 753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
-ஶ்ரீஷா கங்காதரன்