
பத்துமலை, 8 பிப்ரவரி — பத்துமலை திருத்தலத்தை மேம்படுத்துவதற்கும், அங்கு ஒரு பெரிய மண்டபத்தை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் உறுதியாக நிதி ஒதுக்கீடு செய்யும் என மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பத்துமலையில் வருகைபயளித்த பிரதமர், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா மற்றும் தேவஸ்தானப் பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பத்துமலை, இந்துக்கள் மட்டுமின்றி, சுற்றுப்பயணிகளுக்கும் முக்கியமான இடம் என்பதைக் குறிப்பிட்டார்.
“தைப்பூசத் திருவிழா காலங்களில் மட்டும் மில்லியன் கணக்கான பக்தர்கள் பத்துமலையை வந்தடைகிறார்கள். எனவே, பத்துமலைக் கோயிலும் சுற்றுப்புற உள்ளாட்சித் திட்டங்களும் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்காக தேவையான நிதியை அரசு ஒதுக்க முடிவு செய்துள்ளது,” என்றார் பிரதமர்.
தேவஸ்தானத் தலைவர் டான் ஸ்ரீ நடராஜா, பத்துமலையில் புதிய மண்டபம் மற்றும் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமரிடம் விளக்கியுள்ளதாகவும், இதற்கான உதவியை அரசு உறுதியாக வழங்கும் எனவும் அன்வார் தெரிவித்தார்.
“இந்த மண்டபம் இந்திய மக்கள் மட்டுமின்றி, அனைத்து சமுகத்தினருக்கும் பயன்பட வேண்டும். அதனால், இதை ஒரு பல்நோக்கு சமூக மண்டபமாக உருவாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மக்களின் நலனுக்காக இது இருக்கும்,” என்று அவர் கூறினார்.
மொத்தத்தில், பத்துமலையின் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சியில் அரசு உறுதியாக இருக்கிறது என்பதை பிரதமர் மீண்டும் உறுதி செய்துள்ளார்.
-வீரா இளங்கோவன்