
கோலாலம்பூர், 04 நவெம்பர் – சர்வதேச அளவில் நடைபெற்றதாகக் கூறப்படும் Warzone World Championship (WWC) விளையாட்டு நிகழ்ச்சியில் குழந்தைகள் பயன்படுத்தப்பட்டதாக வெளிவந்த வீடியோ தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யூ ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கூறியதாவது, “ஒரு நிகழ்ச்சியின் பிழைகளை சரிசெய்வதற்காக குறைந்த வயதுடைய குழந்தைகளை மீடியா முன்னிலையில் கொண்டு வந்து மன்னிப்பு கோரவைக்கும் செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஒரு குழந்தையின் மரியாதையையும் மனநலத்தையும் பாதிக்கும் வகையில் உள்ளது,” என்று தெரிவித்தார்.
ஹன்னா யூ மேலும் கூறியதாவது, “இது குழந்தைகளின் தவறல்ல. பொறுப்பு ஏற்க வேண்டியது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களே. அவர்கள் தங்களின் தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விளக்கமளிக்க வேண்டும்,” என்றார்.
அமைச்சு தகவலின்படி, WWC எனப்படும் இந்த போட்டி, இளைஞர் மற்றும் விளையாட்டு துறை (PJS) அனுமதியின்றி நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மலேசிய அரசாங்கம் எந்தவொரு சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு முன் துறையின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
இதனுடன், சமூக ஊடகங்களில் பரவியிருந்த வீடியோவில் இரண்டு சிறுவர் பங்கேற்பாளர்கள் கேமரா முன் மன்னிப்பு கோருவது போலக் காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
ஹன்னா யூ இதை “மெய்யாகவே கவலைக்குரிய நிகழ்வு” எனக் குறிப்பிட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதியளித்தார்.
-யாழினி வீரா



