
சென்னை, 17 ஏப்ரல்: சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்ரல் 16 ஆம் தேதி புதன்கிழமை காலை தொடக்கம் பரவலாக மழை கொட்டியது. கடந்த சில நாட்களாக கடும் வெப்பத்தில் வாடிய மக்களுக்கு இந்த மழை நிம்மதியை வழங்கியது.
மதியம் 1 மணிவரை லேசான மழையிலிருந்து மிதமான மழை வரை பெய்தது. சில பகுதிகளில் கனமழையும் பதிவானது. குளிர்ந்த வானிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இருப்பினும், சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது.
சென்னை புறநகரான ஆவடி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இவ்வேளையில் ஒரு விளம்பர பதாகை கிழிந்து மின்கம்பிகள்மீது விழுந்ததால் அந்தப் பகுதியில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் கூடிய காற்றான வானிலை இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-இளவரசி புவனஷங்கரன்