
லாபுவான், 19 செப் – இன்று அதிகாலை லாபுவான், காம்போங் லாஜாவ் பகுதியில் நடந்த துயரமான சாலை விபத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்; மூவர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர் முஹம்மது ஷஸ்லான் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் காரின் பின்புற பயணி இருக்கையில் சிக்கிக்கொண்ட நிலையில், சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதே விபத்தில் காயமடைந்தவர்கள் – சித்தி ரோசியானா ரோஸ்லான் (14), முகமத் சுப்ரீ சடாடோல் (20) மற்றும் முகமத் நஸ்ரின் நஸ்ரி (19) – ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவின் மஞ்சள் மண்டபத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
லாபுவான் மலேசியா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் அப்துல் ரஹ்மான் அலி கூறுகையில், சம்பவம் குறித்த அவசர அழைப்பு இன்று அதிகாலை 1.42 மணி அளவில் வந்ததாகவும், அணி உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
“நாங்கள் வந்தபோது இரண்டு பேர் ஏற்கெனவே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்தனர். மேலும், ஷஸ்லான் பின்புறத்தில் சிக்கிக் கொண்டிருந்தார்; சித்தி ரோசியானா வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டிருந்தார்,” என அவர் கூறினார்.
தீயணைப்பு வீரர்கள் அனைத்து முயற்சியையும் செய்தபோதும், ஷஸ்லான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பின்னர் லாபுவான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.
விபத்தின் காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-ஸ்ரீ



