Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

உழைப்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ASP ராஜன் அவர்களின் சேவையை பாராட்டியே ஆக வேண்டும் – டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன்

Picture: Facebook

பெட்டாலிங் ஜெயா, 16 பிப்ரவரி — மலேசிய காவல் துறையில் 38 ஆண்டுகளாக கடமை, நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் சிறப்பான சேவை வழங்கிய ASP ராஜன் அவர்களின் பணி நிறைவு விழா பெட்டாலிங் ஜெயா சிவில் செண்டரில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்வில் மஇகா தேசிய துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, ASP ராஜன் அவர்களின் சேவையை பாராட்டி பேசினார்.

“மிகச்சிறந்த காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு ASP ராஜன். பதவியில் இருக்கும் போது கிடைக்கும் மரியாதையும், அதிகாரமும் ஒரு வகை மதிப்பு தான். ஆனால், ஓய்வுக்குப் பிறகு சமூகத்திலிருந்து கிடைக்கும் அங்கீகாரமே நம் வாழ்க்கையின் உண்மையான வெற்றி. அந்த அங்கீகாரத்தை ASP ராஜன் முழுமையாக பெற்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை,” என அவர் உணர்ச்சி பொங்கக் கூறினார்.

மேலும், காவல்துறை அதிகாரிகளின் சேவை மக்களின் நிம்மதியான வாழ்விற்கு பேருதவியாக இருப்பதை வலியுறுத்திய அவர், “நாடு மற்றும் மக்கள் பாதுகாப்புக்காக உங்கள் அனைவரும் தொடர்ந்து உழைக்கிறீர்கள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் எப்போதும் மக்களால் மதிக்கப்படும். இந்த வேளையில் ASP ராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியும், மனமார்ந்த வாழ்த்துகளும்,” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு ASP ராஜன் அவர்களின் சேவையை பாராட்டினர். அவர்களில் லோட்டஸ் குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், மஇகா உதவித் தலைவர் டத்தோ முருகையா, சுக்கிம் தலைவர் டத்தோ டி. மோகன், செனட்டர் சிவராஜ் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

ASP ராஜன் தனது நீண்ட கால காவல் துறை பணியில் ஒழுக்கம், கடமை, நேர்மை, தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் மூலம் காவல்துறையின் அடையாளமாக விளங்கியவர். அவரது சேவையால் சமூகத்தில் பெரும் மரியாதையும் நற்பெயரும் பெற்றுள்ளார். அவருடன் பணியாற்றிய சக காவல்துறை அதிகாரிகள், அவரது நேர்மை மற்றும் கட்டுப்பாட்டை ஏற்று பாராட்டினர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவரும் ASP ராஜன் அவர்களின் சிறப்பான சேவை மற்றும் காவல் துறையில் அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்குப் பெருமை தெரிவித்தனர். அவரது ஓய்வு, அவர் செய்து வந்த அர்ப்பணிப்பை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

இந்தப் பணி நிறைவு விழா ASP ராஜன் அவர்களின் காவல் துறை வாழ்க்கையின் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. அவரது அர்ப்பணிப்பு இனி அவர் ஓய்வெடுத்த பிறகும், மலேசிய காவல் துறையின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் நல்வாழ்விற்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்து தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

-யாழினி வீரா

Scroll to Top