Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

பள்ளிகள் நற்பண்பின் தளம் ஆக வேண்டும், தவறான செல்வாக்கின் மேடை அல்ல – ஆண்ட்ரூ டேவிட்

கோலாலம்பூர், 25 அக். –
பள்ளிகள் மாணவர்களின் நற்பண்பு, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் புனித தளமாக இருக்க வேண்டும் என ம.இ.கா. பிரிகேட் வலியுறுத்தியுள்ளது. அவர்கள், சீனப் பள்ளிகளில் மது பானம் வழங்க அனுமதிக்கும் தற்போதைய அமைச்சரவை வழிகாட்டுதலைத் தொடரும் முடிவை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

ம.இ.கா. பிரிகேட் தலைவர் ஆண்ட்ரூ டேவிட் கூறுகையில், “பள்ளிகள் நற்பண்புகளை விதைக்கும் தளமாக இருக்க வேண்டும்; மதுபானம், சிகரெட், வேப் போன்ற பொருட்களை ‘நிறுவன சமூகப் பொறுப்பு (CSR)’ என்ற பெயரில் ஊக்குவிக்கும் இடமாக அல்ல,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, “அத்தகைய நிகழ்வுகள் பள்ளி நேரத்துக்கு வெளியே நடந்தாலும், அவை கல்வி நிறுவனங்களின் மதிப்பையும், மாணவர்களின் ஒழுக்க வளர்ச்சியையும் பாதிக்கும். சமூகப் பொறுப்பு நடவடிக்கைகள் (CSR) சமூக நல அமைப்புகள் அல்லது உரிய துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படலாம்; பள்ளிகளில் அதற்குத் தகுதியில்லை,” என்றார்.

ம.இ.கா. பிரிகேட், பள்ளிகளில் மதுபானம், புகையிலை மற்றும் வேப்பை சாதாரணமாக்கும் எந்த முயற்சியும் மலேசியாவின் சமூக மதிப்புகளுக்கும், இளைஞர்களின் நல்வாழ்வுக்கும் முரணாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், கல்வி அமைச்சகம் தற்போதைய கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்து, அனைத்து வகை பள்ளிகளும் மது, சிகரெட் மற்றும் வேப்பிலிருந்து முழுமையாக விடுபட்ட “நற்பண்பு வலயங்கள்” ஆக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

“ஜெனரேஷன் ஆன்டி ஜெனாயா” இயக்கத்தின் உறுதியோடு, ம.இ.கா. பிரிகேட் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக அங்கத்தினர்கள் அனைவரும் இணைந்து மாணவர்களை தவறான செல்வாக்கிலிருந்து காக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

– யாழினி வீரா

Scroll to Top