
கோலா திரெங்கானு, 31 ஜனவரி — கோலா திரெங்கானுவில் பத்து பூருக் கடற்கரை 2 பகுதியில் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்ட 34 எலும்புக்கூடுகள் மனிதர்களுடயதல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது. கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ACP அஸ்லி முகமது நூர், சுல்தானா நூர் ஜஹிரா மருத்துவமனை (HSNZ) உடற்கூறியல் நிபுணர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
“இந்த எலும்புகள் மனித எலும்புகளின் வடிவம், தடிமன், நீளம் போன்ற அமைப்புகளுடன் பொருந்தவில்லை. இது ஒருவேளை குதிரை போன்ற எந்தவொரு விலங்கினத்தின் எலும்பாக இருக்கலாம்” என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். மேலும், எலும்புகளில் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் திரெங்கானு இரசாயனத் துறைக்கு அனுப்பப்படும் என்றும், அவை எந்த விலங்கினத்தை சேர்ந்தவை என்பதை மேலும் ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று, பத்து பூருக் கடற்கரை 2-ல் உள்ள கைவிடப்பட்ட அரசாங்க குடியிருப்புகளுக்கு பின்புறம் இருந்த புதரில் இந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக வெளியான தகவலால் உள்ளூர் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-யாழினி வீரா