Tazhal Media – தழல் மீடியா

/ Jul 22, 2026
Latest News
tms

கட்டுமானச் செலவினங்கள் உயர்வு– சிறு ஒப்பந்ததாரர்களை நெருக்கடி நிலைக்கு தள்ளுகிறது

கோலாலம்பூர், 5 நவ. – கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு, சிறு அளவிலான ஒப்பந்ததாரர்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிமெந்து, இரும்பு, மணல், கற்கள் போன்ற அடிப்படைப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், திட்டங்களை நிறைவேற்றும் செலவுகள் பெரிதாக உயர்ந்துள்ளன.

இந்த நிலை சிறு ஒப்பந்ததாரர்களின் லாப விகிதத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. பெரும்பாலான சிறு நிறுவனங்கள் முன்பே ஒப்பந்தம் செய்து வைத்த பணிகளில், பொருட்களின் விலை உயர்வை மாற்றிச் சேர்க்க முடியாமல் நஷ்டத்தில் ஆழ்ந்துள்ளன. இதனால் சில நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன.

துறையில் உள்ள வல்லுநர்கள் கூறுவதாவது, ஒவ்வொரு மாதமும் கட்டுமானப் பொருட்களின் விலை குறைந்தது 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது. இதற்கு உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், போக்குவரத்து செலவு அதிகரிப்பு, மற்றும் உற்பத்தி விலையேற்றம் போன்றவை காரணமாகக் கூறப்படுகிறது.

இதனுடன், தொழிலாளர்களின் கூலி, இயந்திர பராமரிப்பு செலவு மற்றும் காப்புறுதி கட்டணங்களும் அதிகரித்துள்ளன. இதனால் சிறு நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டை நிலைநிறுத்தப் போராடி வருகின்றன.

இதற்கான தீர்வாக, அரசு கட்டுமானப் பொருட்களின் விலையை கண்காணித்து, நியாயமான விலை கட்டுப்பாட்டை அமைக்க வேண்டும் என்று தொழில் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. அதேவேளை, சிறு ஒப்பந்ததாரர்களுக்கான சிறப்பு நிதி உதவி திட்டங்களையும் அறிமுகப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-யாழினி வீரா

Scroll to Top