
சைபர்ஜெயா, ஏப்ரல் 3, 2025 – மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) ஒரு Facebook குழுவின் முக்கிய நிர்வாகிகளாக செயல்பட்ட இரு பேரிடம் விசாரணை மேற்கொண்டது. இந்தக் குழு, இன மற்றும் மத அமைதியை பாதிக்கும் தகவல்கள் மற்றும் கருத்துக்களை பரப்பும் முக்கிய தளமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்விசாரணை மார்ச் 27, 2025, இரவு 9.00 மணிக்கு, சைபர்ஜெயாவில் உள்ள MCMC தலைமையகத்தில் நடைபெற்றது. பொது மக்களிடமிருந்து புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, ஒரு கைப்பேசி மற்றும் ஒரு SIM கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் [அடி. 588] 233 (1) (a) பிரிவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் RM500,000 அபராதம் அல்லது இரண்டு வருடம் சிறைதண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும், MCMC, Meta-வுக்கு 110 கோரிக்கைகளை சமர்ப்பித்தது, இக்குழுவில் உள்ள இன வெறியை தூண்டும் இடுகைகளை அகற்ற வேண்டுமென. இதில் 106 இடுகைகள் Facebook சமூக வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக Meta உறுதிப்படுத்தி நீக்கியுள்ளது.
MCMC, மக்கள் இணையத்தை தவறாக பயன்படுத்தி இன, மத அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் தகவல்களைப் பரப்பக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய செயல்கள் மலேசியாவின் இன ஒற்றுமை மற்றும் சமூக அமைதிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
-யாழினி வீரா