
கோலாலம்பூர், 30 ஜனவரி — ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, சில பக்தர்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த தொடங்குகிறார்கள். பால் குடங்கள், முடிக் காணிக்கைகள், காவடிகள் ஆகியவற்றுடன் தைப்பூசத்திற்கு முன்பாகவே பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது முறையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் தலைவர், திருமுறைச் செம்மல் முனைவர் தர்மலிங்கம் நடராசன் விளக்கமளித்தார். “எல்லா நாள்களும் இறைவனுக்கு உகந்தவையே. ஆனால், இன்று அனைவரும் தினசரி ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாது. அதனால், குறிப்பிட்ட நாட்களில் கொண்டாடப்படும் தைப்பூசம், திருவாதிரை, கந்த சஷ்டி போன்ற விழாக்களில் பக்தர்கள் இறைவனை வழிப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது,” என்றார்.
அதன் அடிப்படையில், தைப்பூசத்திற்கு முன்பாகவே நேர்த்திக் கடன்களை செலுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றும், இது எந்தவொரு இறைக் குற்றமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். “வழிபாட்டில் முதன்மையானது இறை அன்பும், மன ஒருமைப்பாடும். தைப்பூசத்திற்கு அருகில் கூடும் மக்கள் கூட்டம், தள்ளுமுள்ளு, நெருக்கடி போன்றவை சிலருக்கு மன அமைதியைக் குறைக்கும். அதனால், அவர்கள் முன்பே நேர்த்திக் கடனை செலுத்துவதில் எந்த தவறும் இல்லை,” என்று அவர் கூறினார்.
மேலும், பெரும்பாலான நேர்த்திக் கடன்களைச் செலுத்துபவர்கள் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர்கள் தங்களின் வேண்டுதல்களை முன்பே நிறைவேற்ற முயல்கிறார்கள் என்றும் தர்மலிங்கம் விளக்கினார். “அழுத்தமான கூட்ட நெருக்கம், சிலரின் அடாவடித் தனம் போன்றவை பக்தர்களின் மனதை ஒருமைப்படுத்த இடையூறாக இருக்கலாம். எனவே, தைப்பூசத்திற்கு முன்பாகவே நேர்த்திக் கடன்களைச் செலுத்தும் நடைமுறை முறையாகவே உள்ளது,” என்று அவர் வலியுறுத்தினார்.
-வீரா இளங்கோவன்