Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பற்றி தவறான தகவல் பதிவிட்ட 6 பேரை விசாரிக்கிறது – தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையம்

Picture: MCMC

புத்ராஜெயா, 11 பிப்ரவரி — மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ஆட்சிக்குழு கூட்டத்தினைப் பற்றிய தவறான மற்றும் அவதூறான தகவல்களை பதிவிட்டதாகக் கூறப்படும் ஆறு நபர்களை தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையம் (MCMC) விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இன்று வெளியிட்ட அறிக்கையில், ஸ்தாப்பாக்கில் உள்ள ஒருவரைச் விசாரணைச் செய்ததாக MCMC தெரிவித்தது. இவர் ஆட்சிக்குழு கூட்டத்தினைப் பற்றிய தவறான தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

“இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் SIM கார்டு கைப்பற்றப்பட்டு, அதற்கான நீதியியல் ஆய்வு நடைபெறவுள்ளது. மேலும், குற்றப்புலனாய்வு பிரிவுடன் இணைந்து மற்றொரு சந்தேகநபர் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அவரிடமிருந்து நாளை மறுநாள் வாக்குமூலம் பெறப்படும்,” என்று MCMC கூறியது.

மற்ற சந்தேகநபர்களைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், இந்த வாரத்தில் கெடா மாநிலத்தின் சுங்கை பெட்டாணி, கிளாந்தான் மாநிலத்தின் கோத்தா பாரு, மற்றும் பேராக் மாநிலத்தின் கேரியான், தெலுக் இந்தான் ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் MCMC தெரிவித்தது.

“முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக துணை பொது வழக்கறிஞரிடம் வழக்குகள் முன்னிலைப்படுத்தப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குகள் தொலைத்தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 (பிரிவு 233(1)(a)) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது ஒரு ஆண்டுவரை சிறை தண்டனை (அல்லது இரண்டும்) விதிக்கப்படலாம்.

மேலும், சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும், சரிபார்க்கப்படாத தகவல்களை பகிர்வதற்கு முன் உண்மைத் தரங்களைச் சரிபார்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

“தவறான தகவல்களை பரப்பாதீர்கள். AIFA (Artificial Intelligence Fact-check Assistant) என்ற பாட்டை பயன்படுத்தி, உண்மை நிலையை சரிபார்க்கலாம். இது Sebenarnya.my இணையதளத்திலும், WhatsApp வாயிலாகவும் 24/7 எளிதாக அணுகக்கூடியதாகும். இந்த சேவையை மலாய், ஆங்கிலம், மண்டரின், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் பயன்படுத்தலாம்,” என்று MCMC அறிவித்துள்ளது.

-வீரா இளங்கோவன்

Scroll to Top