
லண்டன், 9 ஏப்ரல்: கருப்பை மாற்று அறுவை சிகிச்சை (uterus transplant) மூலம் இங்கிலாந்தில் முதன்முறையாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை லண்டனில் உள்ள குவீன் ஷார்லட் & செல்சியா மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 27ஆம் தேதி, 36 வயதான கிரேஸ் டேவிட்சனுக்கு (Grace Davidson) ஏமி (Amy) எனும் பெண் குழந்தை பிறந்துள்ளார். கிரேஸ், Mayer-Rokitansky-Küster-Hauser எனும் அரிய பிறவித் குறைபாட்டால் கருப்பை இல்லாமல் பிறந்தவர். ஆனால், தனது அக்காவிடமிருந்து கருப்பையை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்றதன் மூலம், தாயாகும் கனவு நிறைவேறியது.
“இது எனக்கு கிடைத்த பெரிய வரம்,” எனக் கூறிய கிரேஸ், மற்ற பெண்களுக்கும் இது பெரும் நம்பிக்கையைத் தரும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிப் பிறப்பு கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகளின் நுட்பமான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. உலகளவில் இதுவரை 100க்கும் மேற்பட்ட கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. அந்த முதல் அறுவை சிகிச்சை 2013ஆம் ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்றது.
இந்த நவீன மருத்துவத் திருப்பம் மூலம் உலகம் முழுவதும் சுமார் 50 ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளன.
-இளவரசி புவனஷங்கரன்