Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

‘இரும்புத் தோட்டம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிமுகம்

மண்ணில் பிறந்து, உண்மையில் உருவெடுத்து, சினிமா மொழியில் பேசும் ஒரு கதை என்ற வகையில் உருவாகியுள்ள புதிய மலேசியத் தமிழ்த் திரைப்படம் தான் ‘இரும்புத் தோட்டம்’. இந்த திரைப்படம், இயக்குநர் ஜெயதேவ் ஜெயகுமார் அவர்களின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இயக்குனர் அவர்களுக்கு ஜெயதேவ் ரசிக்க ருசிக்க, திகில், ஓ மை பேக்கரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும், கல்யாணம் 2 காதல் தொடர்களின் இணை இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம், இந்த திரைப்படத்தில் ஒரு முதிர்ந்த கலைநயமாக வெளிப்படுகிறது. தனது சொந்த ஊரான மெலாக்கா மாநிலம், தெபோங் பகுதியை மையமாகக் கொண்டு, ஆழமான உண்மை சம்பவம் கலந்த கதையுடன் அவர் மீண்டும் திரைக்கு திரும்பியுள்ளார்.

இர்பான் ஸைனி, லோகவர்மன் ஸ்டிரைடரன், மேரி தஷானி மேத்யூஸ், மோகனா ராஜ், துர்காஷினி எஸ். விஜயன், வினோ ஷான், விஜய் நாயுடு, வி. கோகிலா, பாலன் காஷ், கலைமாமணி கே.எஸ். மணியம், டத்தோ கீதாஞ்சலி ஜி, அட்லி ஹஃபிட்ஸ், ஆதித் தேவ், தியாகராஜன் ராமசாமி, திவ்யா வீகன் ஜான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிறப்பு தோற்றத்தில் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் பங்கேற்றுள்ளார்.

ஏ.வி.எல்.டி. புரொடக்ஷன் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஜெகன் ஜான் பீட்டர் முன்னெடுத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, ஃபினாஸ் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. ஒளிப்பதிவை தினேஷ் குமார், இசையை ஷமேஷன் மணி மாறன் மேற்கொண்டுள்ளனர்.

உண்மை என்றால் எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்ற கேள்வியை முன்வைக்கும் ‘இரும்புத் தோட்டம்’, விரைவில் மலேசிய திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

-யாழினி வீரா

Scroll to Top