
ஜோகூர் பாரு, 31 ஜனவரி — ஜோகூர் பாரு சீர்திருத்த நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பது அவரது பெற்றோருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
தந்தை எஸ். பன்னீர் (51) கூறுகையில், ஜனவரி 23 அன்று ஜோகூர் பாரு சீர்திருத்த நிலையத்திற்குச் சென்று மகனை பார்க்க முயன்றபோது மட்டுமே, அவர் மருத்துவமனையில் இருப்பதை அறிந்ததாக தெரிவித்தார். பி. ஜகதீஷ் ராஜ் என்பவரை ஜனவரி 21 அன்று சுல்தானா அமினா மருத்துவமனையில் அனுமதித்திருந்ததாக தகவல் கிடைத்தது.
“கடந்த வாரம் மகனை சந்தித்தபோது, அவர் சிறிது கழுத்து வலியுடன் இருந்தார். ஆனால் இப்போது முழுவதுமாக படுக்கையிலேயே இருக்கிறார். அவர் சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறுவதை கேட்டேன்,” என அவர் மனக்குமுறினார்.
இதற்கு உடனடி விசாரணை வேண்டும் என உள்துறை அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளார். “என் மகன் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதைத்தான் நான் விரும்புகிறேன்,” என்று கூறிய அவர், மருத்துவ அறிக்கையும் வெளிப்படுத்தப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
சமூக ஆர்வலர் எஸ். தயாளன், காவல்துறை மற்றும் ஜோகூர் பாரு சீர்திருத்த நிலையம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காதது ஆபத்தான நிலை என்று கண்டித்தார். “அவர் குற்றவாளி அல்ல, அவருக்கு அடிப்படை மனித உரிமை வேண்டும்,” என்றார்.
குடும்பத்தின் வழக்கறிஞர் எம். தினேஷ் கூறுகையில், 11 நாட்களாக மருத்துவமனையில் இருந்தும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என கண்டனம் தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரி தெரிவித்ததாவது, இது சிறை துறையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டது என்றும், ஜகதீஷ் ராஜ் மற்றும் அவரது சகோதரர் பி. வசந்தராஜ் (21) மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
-வீரா இளங்கோவன்