
கோலாலம்பூர், 4 பிப்ரவரி — மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் , 15-ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான அமர்வில் நிறைவேற்றப்பட்ட ஏழு முக்கிய சட்டங்களை அங்கீகரித்துள்ளார். இந்த அமர்வு 2023 அக்டோபர் 14 முதல் டிசம்பர் 12 வரை நடைபெற்றது.
மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல், இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கேள்வி நேரம் தொடங்கும் முன்பு, இந்த சட்டங்களுக்கு அரசர் ஒப்புதல் வழங்கிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட முக்கிய சட்டங்களில் அடங்குவது:
- 2025 ஆண்டு நிதிநிலைச் சட்டம் (Belanjawan 2025)
- 2024 நிதி சட்டம்
- வரி வசூல், நிர்வாகம், அமலாக்கம் தொடர்பான சட்டம் 2024
- லாபுவான் வணிக வரி திருத்தச்சட்டம் (No.2) 2024
- தொற்று நோய்களை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் திருத்தச்சட்டம் 2024
- தொடர்பியல் மற்றும் மல்டிமீடியா திருத்தச்சட்டம் 2024
- நீர் சேவைத் துறை திருத்தச்சட்டம் 2024
மேலும், ஜொஹாரி அப்துல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் மக்களுக்கு நல்ல முன்னுதாரணம் அமைத்து, வளர்ச்சியுள்ள அரசியல் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
-யாழினி வீரா