
கிராஸ் (ஆஸ்திரியா) 11 ஜூன்: தெற்கு ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் நகரின் உயர்நிலை பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பலியானவர்களில் மாணவர்களும், ஆசிரியரும் அடங்குவதாக கிராஸ் மேயர் எல்கே கார் உறுதிப்படுத்தினார். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆஸ்திரியா சந்தித்த மிக மோசமான பள்ளி தாக்குதலாகக் கருதப்படுகிறது. உள்ளூர் ஊடகங்கள் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 30ஐ கடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.
சம்பவத்தில் ஈடுபட்டவர், அதே பள்ளியின் முன்னாள் மாணவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் இரண்டு வகுப்பறைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
90 நிமிடங்களுக்கு பிறகு போலீஸ் சிறப்புப் படைகள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் இணைந்து நடத்திய விரிவான மீட்பு நடவடிக்கையால் சூழ்நிலை “கட்டுப்பாட்டில்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடந்த BORG Dreierschützengasse பள்ளியிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், குற்றவாளி உட்பட 10 பேர் இறந்துள்ளதையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
-ஸ்ரீதரன்



