
பேராக், 6 ஏப்ரல்: பேராக்கின் லெங்கோங் அருகே இப்பகல் காலை கட்டமைப்பில் இருந்த ஒரு ரிசோர்டில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, மூன்று தொழிலாளர்கள் தூர்வார குழியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேராக் மாநில தற்காப்பு மற்றும் தீயணைப்பு பிரிவின் உதவித்துறை இயக்குனர் சபரோடி நோர் அஹ்மட் கூறுகையில், 29 மற்றும் 37 வயதுடைய இரண்டு மலேசியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு இந்தோனேசிய தொழிலாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்ததாக தெரிவித்தார்.
மொத்தமாக ஏழு பேர் குழியில் சிக்கியிருந்த நிலையில், ஐந்து பேர் பொதுமக்களால் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ள இருவர் தீயணைப்புத் துறையினரால் காப்பாற்றப்பட்டபோதும், உயிரிழந்துள்ளதாக மருத்துவக் குழு உறுதி செய்தது.
சம்பவ இடத்தில் உள்ள தூர்வார குழி சுமார் 5.2 மீட்டர் நீளமும், 4.1 மீட்டர் அகலமும், 2.4 மீட்டர் ஆழமும் கொண்டதாக இருந்தது. காலை 10.08 மணிக்கு தகவல் கிடைத்ததும், லெங்கோங் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஆறு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
உயிரிழந்தோர் உடல்கள் கெரிக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன, மேலும் காயமடைந்தோர் அருகிலுள்ள சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-யாழினி வீரா