
படம் : கூகுள்
கொடைக்கானல், 9மார்ச்- இந்தியாவுக்கு அந்நிய செலாவணி ஈட்டித்தரும் விளைபொருட்களில் காபி முதலிடம் பெறுகிறது. உலகிலேயே பெட்ரோலியத்துக்கு அடுத்ததாக 2-வது வியாபாரப் பொருளாக காபி இருக்கிறது. கி.பி.18-ம் நூற்றாண்டில் பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்தால் தென் இந்தியாவில் வியாபாரரீதியாக காபி பயிரி டப்பட்டது. 18-ம் நூற்றாண்டில் அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த காக்பர்ன் என்பவரால், ஏற்காடு பகுதியில் தோட்டப் பயிராக வளர்க்கப்பட்டது. 19-ம் நூற்றாண்டில் கொடைக்கானல் கீழ்பழநி மலைப் பகுதியில் முக்கிய விவசாயமாக வேரூன்றி விவசாயிகளின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த பயிராக காபி விளங்குகிறது.
உலகில் 80 நாடுகளில் காபி சாகுபடி செய்தாலும், 50 நாடுகள் மட்டுமே காபி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உலக அளவில் காபி உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், வியட்நாம் 2-ம் இடத்திலும், இந்தோனேசியா 3-வது இடத்திலும், கொலம்பியா 4-வது இடத் திலும், எத்தியோப்பியா 5-வது இடத்திலும், இந்தியா 6-வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 4.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காபி உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 35,500 ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிரிடப்பட்டு தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதில் குறிப்பாக, 32,000 ஏக்கர் பரப்பளவில் அரபிக்கா ரக காபி பயிரிடப்படும் இடமாக கொடைக் கானல் கீழ்பழநி மலைப்பகுதி உள்ளது.
‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானல் கீழ்மலைக் கிராமங்களான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பூலத்தூர், காமனூர், கே.சி.பட்டி, பாச்சலூர், ஆடலூர், பன்றிமலை பகுதியில் காபி அதிகளவில் சாகுபடியாகிறது. 18,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, காபியின் விலையில் முன்னேற்றம் அடைந்திருப்பது விவசாயிகளுக்கு ஊக்கத்தை கொடுத்து, காபி பயிரிடும் பரப்பளவு அதிகரித்து வருகிறது.
-ஶ்ரீஷா கங்காதரன்