
இஸ்லாமாபாத், 31 ஜனவரி — பாகிஸ்தானில் தனது மகளின் TikTok காணொளிகளை ஏற்க முடியாமல், தந்தையே அவரை சுட்டுக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பிறந்த 15 வயது சிறுமி, அண்மையில் தனது குடும்பத்தினருடன் பாகிஸ்தானுக்கு வந்திருந்தார். முதலில், அன்வார் உல்-ஹக் என்ற குற்றம் சாட்டப்பட்டவர், அடையாளம் தெரியாத ஒருவன் தனது மகளைக் கொன்றதாக காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் தொடர்ந்து நடந்த விசாரணையில், அவர் தான் இந்த கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
குடும்பத்தார், சிறுமியின் உடை அணிவது, சமூக உரையாடல்கள் மற்றும் அவரது வாழ்க்கை முறையை எப்போதும் எதிர்த்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இருந்தபோதே அவரது TikTok வீடியோக்கள் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியதாக ஹக் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு வந்த பிறகும் அவர் அந்த செயல்பாடுகளை தொடர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பற்றிய காவல்துறை விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.
-வீரா இளங்கோவன்