
பினாங்கு, 6 மார்ச் — மலேசியாவில் இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உரிமை கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
சிறுபான்மை இனங்கள் மற்றும் மதங்களின் கலாச்சாரம், மொழி ஆகியவற்றை அவமதிப்பது, ஏளனம் செய்வது மலேசியாவில் புதிதல்ல. பெரும்பான்மை சமூகங்களுக்கு அரசியல் ஆதிக்கம் கிடைத்துள்ளதால், சிலர் ஆணவத்துடன் மற்ற சமூகங்களை இழிவுபடுத்தும் போக்கு காணப்படுகிறது. இதனால், சிறுபான்மையினரின் உரிமைகள் மீறப்படுவதோடு, அவர்களுக்கான சமத்துவமும் குறைகிறது.
அண்மையில், ஏரா எஃப்எம் அறிவிப்பாளர்கள் வழங்கிய அவமதிப்பான கருத்துகள் இந்து சமயத்தை அவமதிப்பதாக அமைந்தன. மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, மூன்று பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், உரிமை கட்சி உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களில் போலீஸ் புகார்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், வெறுமனே எதிர்ப்புகளை வெளிப்படுத்துவது போதுமானதல்ல. மாற்றத்தை உருவாக்க, இந்திய சமூகத்தினர் வாக்குகளை மூலோபாயமாக பயன்படுத்த வேண்டும் என டாக்டர் இராமசாமி தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் பேராக் ஆயிர் கூனிங் இடைத்தேர்தலில், அம்னோவுக்கு எதிராக இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதும், இனவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கத்திடமிருந்து கோர இது முதல் கட்டமாக அமையும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
வாக்குப் பெட்டி மூலம் அரசியலுக்கு வலுப்பெரும் செய்தியை அனுப்புவது, இனவாதத்தை எதிர்க்க சிறந்த வழியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-காவியா கிருஷ்ணனன்