Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

சமூகத்தின் உயர்வை நோக்கி பயணிப்போம் – “மக்கள் கலைஞர்” கவிமாறன்

Picture: Veera

பிரிக்பீல்ட்ஸ், ஏப்ரல் 16 – தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளர்த்திடும் நோக்கில் உருவாக்கப்பட்ட “வாசிப்பை நேசிப்போம் – நித்திரைக் கதைகள்” என்ற திட்டம், நேற்று பிரிக்பீல்ட்ஸில் விமரிசையாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் “மக்கள் கலைஞர்” கவிமாறன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, “நாம் தமிழர் என்று பெருமைபடுகிறோம். ஆனால் நம் வீட்டில், நம் குழந்தைகள் கூட தமிழில் பேசுவதில் தயங்குகிறார்கள். இதுவே மிகவும் வேதனையான சித்திரம். தமிழ் மொழிக்கு நம் நாளாந்த வாழ்க்கையில் அந்த முக்கியத்துவத்தை நாம் தர வேண்டும். தமிழ் பேசுவதில் நம்மால் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “வாசிப்பு என்பது அறிவின் மூலாதாரம். குடும்பத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் இணைந்து தினசரி சிறிதளவாவது வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். இது அவர்கள் அறிவும் ஆளுமையும் வளர என்னும் வகையில் அடிப்படை அம்சமாக அமையும்,” என வலியுறுத்தினார்.

“நாம் நல்ல படிப்பு பெற்ற சமுதாயமாக வளர வேண்டும். படிப்பின் வாயிலாகவே நமது மக்கள் வர்த்தகத்தில், தொழில்களில், மேலிடங்களில் சாதிக்க முடியும். கல்வி மற்றும் அறிவு வளர்ந்தாலே நம் சமூக முன்னேற்றம் உறுதி செய்யப்படும்,” என அவர் எடுத்துரைத்தார்.

இந்த வகை வாசிப்பு ஊக்குவிக்கும் திட்டங்கள், மாணவர்களின் மொழித்திறன் மற்றும் சிந்தனை திறனை வளர்ப்பதோடு, பெற்றோர்களையும் இதில் பங்கேற்கச் செய்யும் ஒரு சிறந்த முயற்சி என அனைவரும் பாராட்டினார்கள்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top