
கோலாலம்பூர், 8 பிப்ரவரி — முருகப் பெருமானுக்காக கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, இந்து சமுதாயத்திற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
“தைப்பூசத் திருவிழா மலேசியாவின் தனித்துவம் மிக்க விழாக்களில் ஒன்றாகும். பக்தர்கள் முன்கூட்டியே நேர்த்திக் கடனைச் செலுத்தி வருகின்றனர். பத்துமலை திருத்தலத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் நேர்த்திக் கடனை செலுத்துவதை காணக் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
மலேசியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பத்துமலையில் வருகயளித்தார். அவருடன், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா, தொழில் முனைவோர் மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன், மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பத்துமலை திருத்தலத்திற்கான அபிவிருத்தித் திட்டங்களை மத்திய மற்றும் சிலாங்கூர் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த உள்ளதாக பிரதமர் உறுதியளித்தார். இதற்காக தேவஸ்தானத் தலைவர் முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்கும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன், பினாங்கு தண்ணீர்மலை பால தண்டாயுதபாணி ஆலயத்திற்கு இரண்டு பெரிய மின்னியல் திரைகளை வழங்க உள்ளதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். இதன் மூலம், தைப்பூசத் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் தூரத்திலிருந்தே ஆலய நிகழ்வுகளை காணொலி மூலம் காணலாம்.
மேலும், இந்தியர்கள் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களில், குறிப்பாக மின்னியல் வணிகத் துறையில் பின்தங்காமல் இருக்க இலக்கவியல் அமைச்சு கவனமாக செயல்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு, பத்துமலையில் பக்தர்களுக்காக இலக்கவியல் அமைச்சு சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
-வீரா இளங்கோவன்