
சுபாங் ஜெயா, 2 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ், சிலாங்கூரில் நிகழ்ந்த வாயுக்குழாய் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிறப்பு நிவாரணமாக RM1,000 பெறுவார்கள் என்று கல்வியமைச்சர் பத்லினா சிடிக் அறிவித்தார். இந்த உதவி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் கல்விச் சீருடைகள் உள்ளிட்ட தேவைகளை வழங்கும் நோக்கத்துடன் வழங்கப்படும்.
மேலும், மாணவர்களின் மனநிலையை மேம்படுத்தும் வகையில் ஆலோசகர்கள் மற்றும் கல்வித் துறையின் ஆதரவு குழுவினரையும் பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் இடைக்காலத் தங்குமனையில் (PPS) மாணவர்களுக்காக ஆலோசகர்களை நியமிக்க உள்ளோம். கல்வி ஆதரவு குழுவும் செயல்படுத்தப்படும். இந்த மாணவர்கள் இன்னும் சில நாட்கள் பள்ளிக்குச் செல்ல முடியாது என்பதைக் கருதி, அவர்கள் முழுமையாக உளரீதியாக தயார் ஆகிய பிறகே பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்கலாம்,” என்று பத்லினா கூறினார்.
அவர் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் அமைந்துள்ள இடைக்காலத் தங்குமனைக்கு காலை 9 மணியளவில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
இந்த தீவிபத்தில் 23 பள்ளிகளைச் சேர்ந்த 102 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை, 109 குடும்பங்களைச் சேர்ந்த 484 பேர் இடைக்காலத் தங்குமனையில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
-யாழினி வீரா