
கோலாலம்பூர், 4 பிப்ரவரி — தைப்பூச விழாவின் மத உணர்வுகளையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் நோக்கில் ‘கந்தன் காவடி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய ஒருமைப்பாட்டு துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
தைப்பூசம், இந்துக் களஞ்சியத்தின் மிகப்பெரிய சமய விழாக்களில் ஒன்று. குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக பங்கேற்கும் விழா என்பதால், அவர்கள் நமது மதம், கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரியத்தினை போற்றும் வகையில் வழிபாடுகளில் ஈடுபட வேண்டும்.
சமய மரபுகளுக்கு முரணாக காவடிகளை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். தைப்பூசம் மற்றும் பிற வைபவங்களில், காவடி நேர்த்திக் கடனின் உண்மையான அர்த்தத்தையும், அதன் வழிபாட்டு முறைகளையும் தெளிவாக உணர்த்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இதன் முதல் கட்டமாக, மலேசிய இந்து தர்ம மாமன்றம் மற்றும் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி இணைந்து, ஜனவரி 7ஆம் தேதி பண்டமாரானில் சிறப்பு பட்டறை நடத்தவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தோள் காவடி எடுப்பது எப்படி? எவ்வாறான காவடிகளை எடுத்துக் கொள்ளலாம்? 48 நாட்கள் விரதம் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்? என்பன பற்றிய விரிவான விளக்கங்கள் வழங்கப்படும்.
இந்த முயற்சி தைப்பூசத்திற்கான ஏற்பாடுகளில் மட்டுமல்லாமல், பங்குனி உத்திரம் போன்ற பிற முக்கிய இந்து விழாக்களிலும் தொடரும்.
“கந்தன் காவடி என்ற புதிய திட்டம் குறித்து பலர் கேள்வி எழுப்பலாம். ஆனால், இந்த முயற்சி இந்திய சமுதாயத்தால் விரைவில் பெரிதாக ஏற்கப்படும்,” என இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செனட்டர் சரஸ்வதி நம்பிக்கை தெரிவித்தார்.
-யாழினி வீரா