
கோலாலம்பூர், 3 மார்ச் — கோலாலம்பூர்: சமூக ஊடகத்தில் இஸ்லாத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விஜயன் சவுரிமுத்து தனது தவறை ஒப்புக்கொண்டு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
முகநூலில் இஸ்லாத்தை குறைத்து மதிக்கும் வகையில் ஒரு பதிவு வெளியிட்டதற்குப் பிறகு, இது அவரது தவறாக இருந்ததாக அவர் தெரிவித்தார். இதற்கு முன்பு, ஒரு தனியார் வானொலி நிலையத்தின் நிருபர்கள் இந்து மதத்தை அவமதித்ததாகக் கூறப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தின் விளைவாக தான் இவ்வாறு செய்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
“நான் தவறு செய்தேன், இதற்காக அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். இந்த செயலை நான் செய்யக்கூடாது,” என்று தனது முகநூல் பதிவில் விஜயன் கூறியுள்ளார். தனியார் வானொலி அறிவிப்பாளர்களின் செயலால் ஏற்பட்ட மனவேதனை காரணமாக தான் இஸ்லாத்தை சிறுமைப்படுத்தும் நிலை உருவாகியதாகவும் அவர் விளக்கினார்.
வெளிநாட்டைச் சேர்ந்த விஜயன் முகநூலில் பதிவிட்ட அந்த மூன்று நிமிட காணொளி குறித்து, மலேசிய போலீஸ் தலைமையகம் புக்கட் அமான் விசாரணை மேற்கொண்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஷாருடின் உசேய்ன் கூறினார்.
இது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூகத்தினரிடையே மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களை போலீஸ் கண்டிப்பாக விசாரிக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
-யாழினி வீரா