
சிம்பாங் அம்பாட் , 30 ஜனவரி — அரசியல் தலைவர்கள் தங்கள் வேறுபாடுகளைப் புறக்கணித்து, மக்கள் சேவையை முதன்மையாகக் கருத வேண்டும் என துணை பிரதமர் டத்தோக் ஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.
“மக்கள் அளித்த நம்பிக்கையும் பொறுப்பும் எந்த அரசியல் கட்சி, மதம், இனம் எனும் பேதமின்றி மதிக்கப்பட வேண்டும். ஒரு அரசியல்வாதியாக, நாம் மக்களுக்குள் பிளவு ஏற்பட விடக்கூடாது. பெரும்பான்மையாகவோ, குறைந்த வாக்கு வித்தியாசத்திலோ வெற்றி பெற்றிருப்பது முக்கியமல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டபின், பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்,” என அவர் இன்று இங்கு சிம்பாங் அம்பாட்டில் நடைபெற்ற ஆர்சி மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசினார்.
பாகான் டத்தோவை சேர்ந்த வியாபாரி எம். நாகராஜா (69) கடந்த 47 ஆண்டுகளாக செண்டோல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய முயற்சியால் இந்த மண்டபம் கட்டப்பட்டது. அகமட் ஸாஹிட், பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், மக்கள், குறிப்பாக இளையோருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் உள்ளூரிலோ வெளிநாட்டிலோ இருந்தாலும் அவர்களை அணுகிச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், நாகராஜாவை அவர் 22வது வயதில் இருந்தே அறிந்திருப்பதாகவும், 2007 ஆம் ஆண்டு நடந்த ஒரு இத் திருநாள் நிகழ்ச்சியில் ‘ராஜா செண்டோல்’ என்ற பட்டத்தை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சி முடிந்தபின், அவர் தன்னுடைய குடும்ப நண்பர்கள் நடத்திய சீனப் புத்தாண்டு திறந்த வீட்டுத் திருவிழாவில் கலந்து கொண்டார்.
-வீரா இளங்கோவன்