Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

‘கூப் மார்ட்’ – மக்களின் சமூக பொருளாதாரத்தை பலப்படுத்தும் முக்கிய வலுவூட்டல்

கோலாலம்பூர், 07 நவ. – மலேசியாவின் கூட்டுறவு இயக்கம் மக்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தளம் என தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஸ்லிமின் பின் யஹாயா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்அவர் கூறியதாவது, தற்போது நாடு முழுவதும் 2,623 ‘கூப் மார்ட்’ கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 652 கடைகள் பெரியவர்கள் வகையில், 120 கல்வி நிறுவனங்களில், 1,807 பள்ளிகளில், 39 டி’மார்ட் மற்றும் 5 ஆங்காசா மார்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சுங்கை பெசார் தொகுதியில் மட்டும் 13 கூப் மார்ட் கடைகள் செயல்படுகின்றன. இவற்றில் ஒன்று பெரியவர்கள் வகை, மீதமுள்ள 12 பள்ளி வகை கடைகளாகும்.

ரமணன் மேலும் குறிப்பிட்டதாவது, அரசாங்கம் மூலம் கூட்டுறவு ஆணையம் (SKM) பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக “மக்களுக்கு நெருக்கமான கடை” என்ற அடையாளத்துடன் கூப் மார்ட் பிராண்டை வலுப்படுத்தும் முயற்சி, மையப்படுத்தப்பட்ட விநியோக மையங்கள் அமைத்தல், குறைந்த விலையில் சொந்த பிராண்டு பொருட்கள் உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், கூப் மார்ட் கடைகளில் கணினி விற்பனை முறை, ஒருங்கிணைந்த சரக்கு நிர்வாகம், மொபைல் பயன்பாடு, தரவு பகுப்பாய்வு போன்ற நவீன முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், கூட்டுறவு உறுப்பினர்களுக்கு சிறப்பு தள்ளுபடி, பி.பி.ஆர் மற்றும் பி40 பகுதிகளில் சமூக விலை முகாம்கள் ஆகியவையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம், மலேசியா மதானி நோக்கத்துடன் மக்களின் நலனும் நாட்டின் பொருளாதாரமும் வலுப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

-யாழினி வீரா

Scroll to Top