
குவாந்தான், மே 2: பஹாங் மாநிலத்தின் மூவட்ஸம் ஷா பகுதியிலுள்ள புக்கித் இபாம் காடுகள் வனவசதி பகுதியில் உள்ள சுங்கை கானோவில், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில், சட்டவிரோதமான இரும்புத் தாது சுரங்கச் செயல்களில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
பொதுப்பணிகள் படை (GOF) ஏழாவது படை பிரிவும் பஹாங் மாநில அமலாக்க பிரிவும் இணைந்து நடத்திய “Op Bersepadu Khazanah” என்ற விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடந்தது.
கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் பங்களாதேஷ் நாட்டவர்கள் என்றும், ஒருவர் உள்ளூர் மலேசியர் எனவும் GOF தெற்காசியா பிரிகேட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுரங்கம் நடத்தப்பட்ட பகுதியில் சட்டப்பூர்வமான சுரங்க அனுமதி இல்லை என்பதுடன், பங்களாதேஷ் நாட்டு நபர்களிடம் செல்லுபடியான அடையாள ஆவணங்களும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
40 முதல் 50 வயதிற்குள் உள்ள இந்த மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இடத்தில் இருந்து சுமார் RM1.25 மில்லியன் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், பாஹாங் மாநில தாது சட்டம் 2001 மற்றும் குடிவரவு சட்டம் 1959/63 ஆகிய சட்டங்களின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
-யாழினி வீரா