
கோலாலம்பூர், 16 பிப்ரவரி — சமீபத்தில் பரவி வரும் சர்ச்சையான “சோளம்” விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, “இந்தியருக்கு விற்பனைக்கு இல்லை” எனக் கூறிய காணொளி இணையத்தில் வைரலாகி, பலர் அதிர்ச்சியும் கோபமும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மஇகா துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கருத்து தெரிவித்து, இவ்வாறு உள்ளடக்கங்களால் இனவெறி அதிகரிக்கக்கூடும் என எச்சரித்தார். “இது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஆனால், இது முழு மலாய் சமூகத்தையும் பிரதிபலிக்கவில்லை. மாறாக, சில தீவிர மனப்பான்மையுடைய தனிநபர்களின் செயல் மட்டுமே” என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் சமூக இடைவெளியை அதிகரிக்க செய்யலாம் என்றும் அதனை உடனடியாகக் கட்டுப்படுத்த தேசிய ஒருமைப்பாடு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “இதில் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், இது மற்ற சமூகங்களிடமிருந்து எதிர்வினையை உருவாக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, கோபமான ஒரு மலேசிய இந்திய வர்த்தகர் அதேபோன்ற விதிமுறையை கடையில் அமல்படுத்தினால், அது சமூக அமைதிக்கு எதிரான ஒரு விரோதச் சங்கிலியைத் தூண்டக்கூடும்” என்று அவர் கவலை தெரிவித்தார்.
மேலும், இனவெறி, அவமானப்படுத்தும் செயல்கள், மற்றும் வெறுப்புப் பேச்சு மலேசியாவின் சமூக நல்லிணக்கத்துக்கு தீங்கிழைக்கக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தினார். இத்தகைய செயல்களை அரசு உறுதியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், இனங்களுக்கு இடையே புரிந்துணர்வும் நம்பிக்கையும் சிதைந்துவிடும் என்றார்.
எனவே, இனவெறியைத் தூண்டும் செயற்பாடுகளை முற்றிலுமாக தடுத்து, சமூக அமைதியை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகள் தேவை என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
-யாழினி வீரா