Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

கோலாலம்பூரில் கண்ணதாசன் விழா 2025 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

படம்:ஊடகம்

கோலாலம்பூர், ஜூன் 30: தமிழ் இலக்கியத்தின் உன்னத ஆளுமை கவிஞர் கண்ணதாசனை நினைவுகூரும் வகையில், கண்ணதாசன் அறவாரியம் ஆண்டுதோறும் நடத்திவரும் “கண்ணதாசன் விழா” 2025, கோலாலம்பூரில் உள்ள ஜாலான் ஈப்போ செட்டியார் மண்டபத்தில் நேற்று மதியம் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மலேசிய இந்தியக் காங்கிரஸின் தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமையிலான சிறப்புரையுடன் விழா தொடங்கப்பட்டது.

தமிழ்த் தொண்டின் ஊடாக மக்களுக்கிடையே செல்வாக்கு பெற்றுள்ள டத்தோ ஸ்ரீ சரவணன், “கவிஞர் கண்ணதாசனின் எழுத்துகள் மனித மனங்களை மாற்றிய வல்லமை வாய்ந்தவை. அவரைப் போல ஒரு இலக்கியப் பெருமையை நாம் நினைவுகூரும் இந்த நிகழ்வு, தமிழர் பண்பாட்டு அடையாளத்தை புதுப்பிக்கிறது” என்றார்.

விழாவில் கவிஞர் எ. பெர்னாட்ஷா, இசைவாணி இந்திரா விஜயலட்சுமி, மற்றும் தமிழ்ச் சுடர் தாமல். கோ. சரவணன் ஆகியோர் தமிழ்த் திறனோடு இலக்கிய உரையாற்றினர். இவற்றின் பின்னர், கவிதை மேதை பாவலர் கோவேந்தன் மேடையில் எழுச்சி மிகுந்த கவிதைகளை வாசித்தார்.

இந்த விழாவின் சிறப்பு அம்சமாக, தமிழுக்காக பல்வேறு துறைகளில் உழைத்த நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி டத்தோ ஸ்ரீ தெய்வீகன் அவர்களுக்கு தமிழ்க்காவலர் முருகு சுப்பிரமணியம் விருது, புகழ்பெற்ற ஓவியர் லேனாக்கு சாதனைத் தலைவர் துன் சாமிவேலு விருது, சமூக சேவையாளரான திருமதி கமலா சரஸ்வதிக்கு தமிழவேல் கோ. சாரங்கபாணி விருது, திருமதி எல். ராமன்க்கு மக்கள் தலைவர் டான் ஸ்ரீ எஸ். சுப்பிரமணியம் விருது, மற்றும் திருமதி விஜயவாகினி ராஜுக்கு இறையருட்கவிஞர் சீனி னை முகமது விருது வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், பல விருந்தினர்கள் தங்களின் தமிழ்ப்பாசம், இலக்கிய அனுபவங்களை பகிர்ந்தனர். தமிழ்க் கவிதைகளின் மகத்துவத்தை நினைவுகூறும் இந்த விழா, இளம் தலைமுறையிடம் தமிழும் இலக்கியமும் மீதான ஈர்ப்பை வளர்க்கும் வகையில் அமைந்தது.

-யாழினி வீரா

Scroll to Top