
போர்ட்டிக்சன், 22 ஜனவரி — தெலுக் கெமாங்கில் ஒரு வீட்டில் குழந்தை பிறந்ததை மறைத்து, ஒரு பெண் குழந்தையின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
போர்ட் டிக்சன் மாவட்ட காவல் துறையினர் தகவலின்படி, 18 வயதுடைய இளம் பெண்ணும், 21 வயதுடைய இளம் ஆணும் தனித்தனியான இடங்களில் நேற்று இரவு 8.30 முதல் 8.45 மணிக்குள் கைது செய்யப்பட்டனர்.
போர்ட் டிக்சன் மாவட்ட காவல் துறை தலைவர் சுப்ரிடெண்ட் மஸ்லான் உதின் கூறுகையில், “நேற்று காலை 11.13 மணிக்கு போர்ட் டிக்சன் மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையை கண்டறிய முடியவில்லை என தகவல் கூறப்பட்டது.
பின்னர், வழக்குப்பூர்வமாக மேற்கொண்ட விசாரணையில் அந்த குழந்தை வீட்டின் அறையில் ஒரு பையில் மறைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. சிசுவின் உடலில் பாதிப்புகள் இருந்தன, குறிப்பாக மார்பில் கூர்மையான பொருளால் ஏற்பட்ட காயங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது,” என்றார்.
தகவலின் அடிப்படையில், துயரச் சம்பவத்திற்கு காரணம் குடும்பத்தினரின் எதிர்ப்பிற்கான பயம் மற்றும் கவலை என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய பொருட்கள், உட்பட தாயின் உடைகள், ஆயுதம், மற்றும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302ஆம் பிரிவின் கீழ் கொலை குற்றமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு சந்தேக நபர்களும் இன்று போர்ட் டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராக உள்ளனர். #tazhalmedia
– வீரா இளங்கோவன்