
புத்ரா ஜெயா, ஏப்ரல் 4: மலேசியா பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள், இந்திய இசை துறையின் துருவ நட்சத்திரம் இசைஞானி இளையராஜாவை இன்று தனது அலுவலகத்தில் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, மலேசியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கலை, கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விரிவாக உரையாடப்பட்டது. இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் கலாச்சார நினைவுகள் மற்றும் இந்திய திரைப்படங்கள், இசை ஆகியவை மலேசிய இந்தியரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இளையராஜாவின் கலைப்பயணத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் பாராட்டியதுடன், மலேசியாவின் பன்முகத் தன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கலை மற்றும் கலாச்சார வளர்ச்சி தொடரும் என்பதையும் உறுதியளித்தார்.

நாளை நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்காக பிரதமர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். “இந்த நிகழ்ச்சி அவரது இசை பயணத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டமாக அமையட்டும்,” என்றார் பிரதமர் அன்வார்.
இச்சந்திப்பு, கலாச்சார உறவுகள் மட்டுமன்றி, இருநாட்டு மக்களுக்கும் ஒன்றுபட்ட அனுபவங்களை உருவாக்கும் பணிக்கு ஒரு புதிய தொடக்கமாகவும் கருதப்படுகிறது.
-வீரா இளங்கோவன்