
ரியாத், 7 நவ. – மலேசிய அரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் அரப் சவூதிக்கு மேற்கொண்ட நாடு பயணம், இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம், மலேசியா மற்றும் அரப் சவூதி இரு நாடுகளுக்குமிடையேயான இராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைகிறது.
1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசிய அரசரின் இது முதல் அதிகாரப்பூர்வ நாடு பயணமாகும். சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்கு சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் மற்றும் கிரீட இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆகியோர் மிகுந்த மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
இப்பயணத்தின் முக்கிய நோக்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவாக்குவது ஆகும். குறிப்பாக முதலீடு, வர்த்தகம், கல்வி, சுற்றுலா, ஹஜ் மற்றும் உம்ரா மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பல முக்கிய உடன்படிக்கைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், மலேசியா – அரப் சவூதி உறவை ஒரு மடானி கூட்டாண்மை ஆக மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களும் நடைபெற்றன. இதன் மூலம் மலேசியா மக்களுக்கு அதிக பொருளாதார வாய்ப்புகள் மற்றும் சமூக நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இந்த நாடு பயணம், மலேசியா உலக அரங்கில் தன்னுடைய நிலையை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு முக்கிய அடிக்கல் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால நட்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகும்.
– யாழினி வீரா



