Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

பல்கலைக்கழக மாணவி கொலை: நீதிக்காக பரவும் போராட்டம் – பல்கலைக்கழக நிர்வாகம் மீது மக்கள் கோபம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26: சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி படித்து வந்த மாணவி மணீஷப்ரியத் கௌர் அக்காரா (20) என்பவர் கொலையுண்ட மரணம், சமூக ஊடகங்களில் பரவலான சோகத்தையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு பதிலாக நீதியும் பாதுகாப்பும் தேவைப்படுவதாக அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெண்கள், குடும்ப மற்றும் சமூக நல அமைச்சரான நான்சி ஷுக்ரி, மாணவியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். “இந்த இரக்கமற்ற சம்பவத்திற்கு நீதியை உறுதி செய்ய, அதிகாரிகள் நேர்மையாக நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார் அவர்.

மணீஷா, சரவாக்கின் கூச்சிங்கைச் சேர்ந்தவர். கடந்த செவ்வாய்க்கிழமை, தனது சைபர்ஜெயா குடியிருப்பில் நண்பரால் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தலையில் வலுவான அடிப்பட்டுள்ளதால் மரணம் ஏற்பட்டது என செப்பாங் போலீஸ் தலைவர் நூர்ஹிசாம் பாகமான் உறுதிப்படுத்தினார்.

வசிப்பிடம் முறைகேடு அல்லது பாலியல் வன்முறை என உறுதி செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

துணை அமைச்சர் ஐமான் அதிரா சாபு இதனை “அதிர்ச்சிகரமான கொலை” எனக் குறிப்பிட்டு, விசாரணை முறையாக, நேர்மையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

ம.இ.கா மகளிர் பிரிவு தலைவர் என். சரஸ்வதி, மாணவர்கள் தங்கும் இடங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

இதற்கிடையில், மணீஷாவின் மரணத்திற்கு தொடர்ந்து மெளனம் காத்த சைபர்ஜெயா பல்கலைக்கழகம், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பலரும் #JusticeForManiisha என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி நீதி கேட்டு குரல் கொடுத்துள்ளனர்.

பலர், மாணவி உயிரிழந்த பிறகு சில மணி நேரத்தில் பல்கலைக்கழகம் விளம்பரப் பதிவுகளை வெளியிட்டதைக் கண்டித்து, “நீங்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top