
ஈப்போ, 9 பிப்ரவரி — சீனப் புத்தாண்டை முன்னிட்டு பேராக் மாநில சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) கடந்த ஜனவரி 20ஆம் தேதி தொடங்கிய சிறப்பு மோட்டார் சைக்கிள் சோதனை நடவடிக்கையில் மொத்தம் 24,494 மோட்டார் சைக்கிள்கள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 143 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பேராக் மாநில ஜே.பி.ஜே. இயக்குநர் முகமது யூசுப் அபுஸ்தான் தெரிவித்தார்.
சோதனையின் போது விதிமுறைகள் மீறப்பட்டமைக்காக 2,511 மோட்டார் சைக்கிள்களுக்கு மொத்தம் 6,039 ஜே.பி.ஜே(பி)22 குற்ற அறிக்கைகள் வழங்கப்பட்டன. லைசென்ஸ் மற்றும் சாலை வரி இல்லாமை, வாகன எண் பட்டைகளின் விதிமுறை மீறல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
பதினெட்டு நாட்கள் நீடித்த இந்த சோதனை நடவடிக்கை, வாகனமோட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க பெரிதும் உதவியதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு இதே நடவடிக்கையின் போது 7,383 குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 20% குறைவடைந்துள்ளது, இது சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதற்கான அடையாளம் என அவர் தெரிவித்தார்.
நேற்றிரவு ஜாலான் சுல்தான் இஸ்கந்தார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலைப் போக்குவரத்து குற்றங்கள், சட்டவிரோதப் பந்தயம், மோட்டார் சைக்கிள்கள் மாற்றியமைத்தல் போன்ற குற்றங்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு சோதனை இன்றுடன் முடிவடைகிறது என தெரிவித்தார்.
-வீரா இளங்கோவன்