
கிள்ளான், 18 பிப்ரவரி — செத்தியா ஆலாமில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர், இன்று அதிகாலை கிள்ளாங் மாவட்டத்திலுள்ள புலாவ் கேத்தாம் ஓட்டலில் நடந்த போலீசாருடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்.
சிலாங்கூர் மாநில காவல் தலைவர் டத்தோக் ஹுசைன் ஓமர் கான் தெரிவித்ததாவது, 30 வயதிற்குள் உள்ள குற்றவாளி, புக்கிட் அமான் மற்றும் சிலாங்கூர் குற்றப்புலனாய்வு பிரிவுகளின் கூட்டுப் பணியில் சுமார் காலை 3 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டார். “ஓட்டல் அறையில் துப்பாக்கிச்சண்டை நடந்தது, இதில் சந்தேகநபர் உயிரிழந்தார்,” என்று அவர் தெரிவித்தார்.
சந்தேகநபரிடம் இரு துப்பாக்கிகள் கைப்பற்றபட்டதாகவும், அவர் கடந்த இரண்டு நாட்களாக அந்த ஓட்டலில் மறைந்து இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிக்கு மொத்தம் ஒன்பது வழக்குகள் இருந்தன, அதில் ஏழு கொள்ளை சம்பவங்கள் மற்றும் ஒன்று போதைப்பொருள் தொடர்பானது.
பிப்ரவரி 8 ஆம் தேதி, செத்தியா ஆலாமில் உள்ள வணிக வளாகத்தில் சுத்தம் செய்யும் பணியில் இருந்த ஒரு தொழிலாளி அடையாளம் தெரியாத நபரால் கால் பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டார். பின்னர் குற்றவாளி ஒரு வாகனத்தை பறித்து ஓட்டுநரை தப்பிக்க உதவ கட்டாயப்படுத்தி விட்டு தப்பியோடியதாக தெரிய வந்தது.
-வீரா இளங்கோவன்