
ஷாஆலம், 17 நவ. – மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவை இன்று ஷாஆலம் ஐடிசிசி மண்டபத்தில் அமைச்சர், தலைவர்கள், பேராளர்கள் கலந்து கொண்ட உற்சாக சூழலில் சிறப்பாக நடைபெற்றது. கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்த ஆண்டு மாநாடு, நாட்டின் பல மாநிலங்களிலிருந்து வந்த பிரதிநிதிகள் பங்கேற்பால் மேலும் வண்ணம் பெற்றது.
இந்த முக்கிய நாளை முன்னிட்டு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இதயம் கனிந்த வாழ்த்தை அனுப்பி வைத்தது மாநாட்டின் முக்கிய அம்சமாக அமைந்தது. மலர் கூடை மூலம் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் மாநாட்டில் நேரடியாக பங்கேற்று அரசாங்கத்தின் ஆதரவை வெளிப்படுத்தினார்.
மஇகா தேசியப் பேராளர் மாநாடு என்பது இந்திய சமூகத்தின் உரிமைகள், கல்வி, சமூக முன்னேற்றம், நலன் போன்ற துறைகளில் கருத்து பரிமாற்றம் நடைபெறும் முக்கிய தளமாக எப்போதும் இருந்து வருகிறது. சமூகத்துக்கான நீண்டகால வளர்ச்சி திட்டங்களை உருவாக்குவதில் இது மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.
மடானி கொள்கையின் அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கும், நியாயமான மற்றும் முற்போக்கான வளர்ச்சி பாதையை தொடர அரசாங்கம் உறுதி பெற்றுள்ளதாக பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் வலியுறுத்தினார். மேலும், “ஒற்றுமை, துணிச்சல், மாற்றத்திற்கான மனப்பாங்கு ஆகியவை மட்டுமே நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சமமான வளர்ச்சி பலனை அனுபவிப்பதை உறுதி செய்யும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விழாவும், தலைவர்களின் உரைகளும், எதிர்காலத்திற்கான திட்டங்களும் இந்திய சமூகத்தின் முன்னேற்றபாதையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– யாழினி வீரா



