Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

பகவத் கீதை மீது கைவைத்து பதவிப் பிரமாணம் எடுத்த எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல்

படம் : இந்து தமிழ்

வாஷிங்டன், 22 பிப்ரவரி- அமெரிக்காவின் எஃப்பிஐ (FBI) புலனாய்வு அமைப்பின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுக் கொண்டார். இப்பதவியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அலங்கரிப்பது இதுவே முதன்முறை. குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் காஷ் படேல்.

பதவியேற்பு விழாவில் காஷ் படேல் உடன் அவரது காதலி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். காஷ் படேலுக்கு அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது, காஷ் படேல், இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையின் மீது கைகளை வைத்து பதவிப் பிரமாண உறுதிமொழியேற்றார்.

பதவியேற்பு விழாவில் பகவத் கீதையின் சாட்சியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர்களில் காஷ் படேல் இரண்டாவது நபராவார். ஏற்கெனவே சுஹாஷ் சுப்ரமணியம் கீதையின் சாட்சியாக பதவியேற்றது நினைவுகூரத்தக்கது, இந்திய வம்சாவளி வழக்கறிஞரான சுஹாஸ் சுப்ரமணியம் வர்ஜீனியா மற்றும் கிழக்குக் கடற்கரையில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

பதவியேற்புக்குப் பின்னர் காஷ் படேல், “உலகின் மிகப் பெரிய நாடான அமெரிக்காவின் சட்ட அமலாக்க முகமைக்குத் தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள். FBI-க்கு உள்ளேயும், அதற்கு வெளியேயும் பொறுப்புடன் செயல்படுவேன்.” என்றார்.

இந்த பதவியேற்பு குறித்து ட்ரம், “காஷ் படேல் அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என நம்புகிறேன்; புலனாய்வு ஏஜன்ட்டுகளுக்குக் காஷ் படேலைப் பிடிக்கும்”,என்று கூறியுள்ளார்.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top