
சுபாங் ஜெயா, 2 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் நேற்று காலை 8.10 மணிக்கு ஏற்பட்ட எரிபொருள் குழாய் வெடிப்பு பகுதியை போர்க்களம் போல் மாற்றியமைத்தது. நோன்பு பெருநாள் பண்டிகையின் இரண்டாம் நாளில், சமூக ஊடகங்களில் கொண்டாட்டங்களை விட, அழிவின் சோகமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களே ஆதிக்கம் செலுத்தின. வீடுகள் காற்றில் பறக்கும் தூசியில் மூடப்பட்டிருந்தன, எரிந்து கருகிய மரங்கள், புல்கள் மற்றும் நாசமாகிய வாகனங்கள் மலேசியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமர் கான் கூறுகையில், 74 குடும்பங்களைச் சேர்ந்த 364 பேர் இந்த பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 அடி உயரத்திற்கு எரியுதலும், 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியதுமாக, இந்த தீ விபத்து பெரும் பேரழிவாக மாறியது.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்ததாவது, 11 அரசு முகவரிகளில் இருந்து 325 பேர் இணைந்து ஏழு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, மாலை 3.34 மணிக்கு தீ கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், முதன்மை குழாய்களை மூடியதால், இரண்டாவது வெடிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், ஆனால் தீயணைப்பு படையினர் அடுத்த 20 மணி நேரம் அப்பகுதியில் கண்காணிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பகுதியை நேரில் பார்வையிட்ட பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வீடுகள் முற்றிலும் சேதமடைந்தவர்களுக்கு RM5,000 மற்றும் காயபட்டவர்களுக்கு RM2,500 உடனடி நிவாரண உதவியாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், மத்திய மற்றும் சிலாங்கூர் அரசுகள், பெட்ரோனாஸ் ஆகியவை வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க பொறுப்பேற்கும் என உறுதியளித்தார். அவரது மனைவி டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார்.
மலேசியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது, மாலை 6.00 மணி நிலவரப்படி, 100 பேர் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 30 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல், சமூக மற்றும் மத நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளன. ஸ்ரீ மஹா காளியம்மன் கோவில் மற்றும் மஸ்ஜித் அல் ஃபலாஹ் USJ 9 ஆகியவை தற்காலிக சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. மஸ்ஜித் நூருல் இமான் மற்றும் மஸ்ஜித் புத்ரா ஹைட்ஸ் தற்காலிக மறுவாழ்வு மையங்களாக அமைக்கப்பட்டன.
காப்புறுதி நிறுவனங்கள் Takaful Malaysia மற்றும் Etiqa Malaysia பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளன. மேலும், மலேசிய வங்கிகள் சங்கம் (ABM) தற்போது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிகளுடன் கலந்துரையாடி உதவிகளை பெறலாம் என அறிவித்துள்ளது.
– யாழினி வீரா