
பத்துமலை, மே 2: “கோவில் ஹராம்” என கூறுவதை உடனே நிறுத்த வேண்டும் என மஹிமா அமைப்பின் தலைவர் டத்தோ கண்ணா சிவகுமார் வலியுறுத்தியுள்ளார். நேற்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயண விழாவில் பேசிய அவர், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருவதை ஆழமாகக் கண்டித்தார்.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்த விழா, மஹிமா மற்றும் டிஎஸ்கே குழுமம் இணைந்து சிறப்பாக நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
டத்தோ சிவகுமார் மேலும் கூறுகையில், இந்த மாதிரியான ஆன்மீக நிகழ்வுகள் இனி வருடந்தோறும் சிறப்பாக நடக்க வேண்டும் என்றார். நாட்டில் இந்துக் கோவில்களின் நில உரிமை பிரச்சனைக்கு இது சரியான நேரம் எனவும், எதிர்வரும் பொதுத் தேர்தலை பயன்படுத்தி, அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை அழுத்தம் கொடுத்து தீர்வு காண்பிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
“தேர்தலில் உங்கள் வாக்கின் மதிப்பை உணர்த்துங்கள். உங்கள் கோவிலுக்காக குரல் கொடுக்காதவர்களுக்கு முறையாக பதிலளியுங்கள்,” என்றார் அவர் உறுதியோடு.
-ஸ்ரீதரன்