
கிள்ளான், 17 ஜூன் : சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் கம்போங் ஜாவா பகுதியில் மேற்குக் கரை நெடுஞ்சாலை (WCE) திட்டத்துக்காக நிலங்கள் கைப்பற்றப்பட்ட விதமும், அதனுக்கான இழப்பீடு சரிவர வழங்கப்படவில்லை என்பதும் தற்போது தீவிர எதிர்ப்பு மற்றும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், 11113 என்ற குறியீட்டில் பதிவு செய்யப்பட்ட நிலங்களுக்கான சந்தை விலை மதிப்பீடு பாராமுகமாக கவனிக்கப்படவில்லை என, அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் முன்னிட்ட குற்றச்சாட்டின்படி, சட்டப் போராட்டம் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தும், WCE நிறுவனம் கட்டடங்களை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில், புரட்சி இயக்கத்தின் தலைவர் உமாகாந்தன் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் ஒற்றுமையாகக் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் MIPP கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ சத்தீஷ் குமார், சமூகக்குழு செயலாளர் மொக்தார் யூசுப் அப்துல்லா, கெராக்கான் கட்சியின் உறுப்பினர் டியோ சின் வான் மற்றும் பாஸ் கட்சியைச் சேர்ந்த திபாகரன் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உமாகாந்தன், “இது சுமையான வழக்கான நில கையகப்படுத்தல் இல்லை; அரசாங்கத்தின் கவனக்குறைவால், மக்கள் சட்டரீதியாக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு கூட வழங்கப்படவில்லை, மேலும் மக்களின் சுரண்டல் குறித்து உள்ளூர் தலைவர்கள் மௌனம் காத்துள்ளனர்” எனக் கடுமையாக விமர்சித்தார்.
இதே வேளையில், சந்திரகுமார் சுப்ரமணியம் என்பவர், வழக்கு முடிவுக்கு வராத நிலையில் வீடுகளை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்படுவது நியாயமற்றது எனக் கூறினார். மற்றொரு குடியிருப்பாளர் செல்வேந்திரன் முனியாண்டி, “ஒரு முன்னாள் போலீசாரிடம் வன்முறை நடந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அச்சுறுத்துகிறார்கள்” என வேதனை தெரிவித்தார்.
முந்தைய கட்டங்களில், WCE நிர்வாகம் “எங்களால் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை” என மறுப்புத் தெரிவித்திருந்தாலும், நிலவரம் மாறுபட்டதாக மக்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
-யாழினி வீரா



