
கோலாலம்பூர், 9 ஜூன்: கெரிக் – ஜாலான் ராயா திமூர்-பாரத் (JRTB) பானுனில் நடந்த பயங்கர விபத்தில் உயிரிழந்த 15 மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு மனஉறுதியும் சகிப்பும் வழங்கப்பட வேண்டியதாகக் கேட்டுக்கொண்டார்.
தனது ஃபேஸ்புக் பதிவில், “உயிர்கள் மிகவும் விலைமதிப்பற்றவை; அவற்றுக்கு மாற்றமில்லை. அனைவருக்கும் விழிப்புணர்வாக அமைய வேண்டும். எப்போதும் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
அத்துடன், உயர் கல்வி அமைச்சு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
உயர் கல்வி அமைச்சர் சாம்ப்ரி அப்துல் காதிர், அமைச்சு முழுமையான உதவியை வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
இந்த விபத்தில் UPSI மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஜெர்டெஹ் (தெரெங்கானு) இருந்து தஞ்சோங் மாலிம் (பேராக்) நோக்கி பயணிக்கையில் பல்வேறு வாகனங்களுடன் மோதியதில் 48 பேரில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மூவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஏனையோர் காயமடைந்துள்ளனர்.
UPSI துணைத் துணைவேந்தர் நோர்காலிட் சலிமின் தெரிவித்ததாவது, மாணவர்கள் பெரும்பாலும் ஹரி ராயா ஹாஜி விடுமுறைக்குப் பிறகு தங்கள் பல்கலைக்கழகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்றார்.
-யாழினி வீரா



