
படம் : கூகுள்
கீவ், 4 மார்ச்- ‘உக்ரைனுக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்தியிருப்பது, எங்களை ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க வைக்க அவர் முயற்சிப்பதாகவே தோன்றுகிறது’ என்று உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உக்ரைனின் நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழு தலைவர் ஒலெக்சாண்டர் மெரேஷ்கோ கூறுகையில், “இப்போது உதவிகளை நிறுத்துவது என்பது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உதவுவதேயாகும். மேலோட்டமாக பார்த்தாலே இது மோசமானது. அவர் எங்களைச் சரணடைவதை நோக்கித் தள்ளுவது போலத் தோன்றுகிறது என்றார்.
இதில் முக்கியான விஷயம் என்னவென்றால், இது ஓர் உளவியல் அடி. உக்ரைன் மீதான அரசியல் அடி. இது எங்களின் மன உறுதிக்கு உதவாது. இங்கோ ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டவர்களையே அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அந்த நாட்டுக்கு தேவையான ஆயுத உதவிகளை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன. இது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறும்போது, “பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இணைந்து புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை தயார் செய்வோம். இதை அமெரிக்காவிடம் சமர்ப்பிப்போம். எங்களை பொறுத்தவரை உக்ரைனின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம். ஐரோப்பிய நாடுகளின் ராணுவ வீரர்கள் அடங்கிய அமைதிப் படையை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
-ஶ்ரீஷா கங்காதரன்