
சென்னை 11 ஜூன் : புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாமல் போனதற்காக, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன் என்ற நபருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கும் வகையில் சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2023 ஆகஸ்ட் 12ஆம் தேதி “மறக்குமா நெஞ்சம்” எனும் தலைப்பில் சென்னை ஈசிஆரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி, அன்றைய மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர் செப்டம்பர் 10ஆம் தேதி நிகழ்ச்சி மீண்டும் நடத்தப்பட்டது. முன்பே நுழைவுச்சீட்டு வாங்கியவர்களுக்கு அதில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
அர்ஜுன், ரூ.10,000 செலவில் நுழைவுச்சீட்டுடன் வாகன நிறுத்த கட்டணமும் செலுத்தியிருந்தார். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை. முந்தைய நிகழ்ச்சி ரத்து குறித்து முன்அறிவிப்பும் வழங்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து அர்ஜுன் நுகர்வோர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணையின் பின், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு அவர் ₹50,000 இழப்பீடு மற்றும் ₹5,000 வழக்கு செலவாக இரண்டு மாதங்களில் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
-ஸ்ரீதரன்



