Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

2026 தைப்பூச விழாவை சமய நன்னெறிகளுடன் கொண்டாட இந்து பெருமக்களுக்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் வேண்டுகோள்

Picture : Tazhal

மலேசிய இந்துதர்ம மாமன்றம், பினாங்கு அருள்நிலையத்தின் தலைவர் திரு. தனபாலன் நந்தகுமார் அவர்கள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தைப்பூசப் பெருவிழாவை ஒரு முழுமையான ஆன்மீகப் பெருவிழாவாக, சமய நன்னெறிகளுக்கு உட்பட்டு கொண்டாட இந்துப் பெருமக்கள் அனைவரும் உறுதிகொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

மலேசிய திருநாட்டில் இந்து பெருமக்கள் அனைவரும் ஆழ்ந்த பக்தி நெறியுடன் கொண்டாடும் மாபெரும் சமய விழாவாக தைப்பூசம் விளங்குகிறது. மலேசியாவின் பல இன மக்களும், வெளிநாட்டவர்களும் வருகை தந்து பக்தியுடன் கண்டு மகிழும் பெருவிழாவாகவும் இது திகழ்கிறது. பினாங்கு மாநிலத்தில் தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி சுவாமியின் திருக்கோயிலில் இவ்வாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தைப்பூச நாளில் தங்கரதத்தில் சக்தி வேலும், வெள்ளி இரதத்தில் முருகப்பெருமானும் சர்வ அலங்காரங்களுடன் பவனிவரும் அழகு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்பது திண்ணம்.

பினாங்கு மாநில தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம் மற்றும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நல்லாதரவுடன், மலேசிய இந்துதர்ம மாமன்றம் தைப்பூசப் பெருவிழாவின் போது பக்தர்கள் ஆகம முறைப்படி பால் குடங்கள் எடுப்பதற்கு தேவையான வசதிகளை செய்து தரும் “தர்மவேல்” திட்டத்தை இவ்வாண்டும் மேற்கொள்ளவுள்ளது. இந்த சேவை மையம் ஜாலான் உத்தாமா – ஜாலான் கோட்லிஃப்ட் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தின் பின்புற வளாகத்தில் நடைபெறும்.

இங்கு பால் குடம் எடுக்கும் பக்தர்கள் பால் குடங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை மட்டுமே கொண்டு வர வேண்டும். அபிஷேகப் பால் குடங்களுக்கு முறையான பூஜைகள் செய்து பக்தர்களிடம் வழங்கப்படும். இச்சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். ஆகவே பக்தர்கள் இந்த “தர்மவேல்” சேவை மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இந்த புனித தைப்பூச நாளில், எம்பெருமான் முருகவேளின் திருவருட்கருணையைப் பெற அனைவரும் கீழ்க்கண்ட சமய நெறிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்று திரு. தனபாலன் நந்தகுமார் அவர்கள் அன்புடன் கேட்டுக் கொண்டார்:

  1. முறையான விரதங்களை கடைப்பிடித்து நேர்த்திக்கடன்களை பக்தியுடன் நிறைவேற்ற வேண்டும்.
  2. பாற்குடம் மற்றும் காவடி சுமந்து செல்லும் போது இறைநாமம், பக்திப் பாடல்கள், “வேல் வேல்” முழக்கத்துடன் அமைதியாகச் செல்ல வேண்டும்.
  3. காவடி நேர்த்திக்கடன் நிறைவு செய்த பின், சுமந்து வந்த காவடிகளை இல்லத்திற்கு கொண்டு சென்று பூஜை அறையில் வைத்து தீபாராதனை செய்து, திருமுருகனுக்கு நன்றி கூறி விரதத்தை முறையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  4. பெரிய அளவிலான அலங்காரக் காவடிகளை இல்லத்திற்கு கொண்டு செல்ல இயலாத நிலையில், ஆலய வளாகத்தில் ஒதுக்கப்பட்ட புனித இடங்களில் மரியாதையுடன் வைத்துச் செல்ல வேண்டும்.
  5. காவடிகளில் உள்ள தெய்வப் படங்கள், தெய்வச் சிலைகள் மற்றும் வேல் போன்ற புனிதப் பொருட்களை அவசியம் அகற்றி இல்லத்திற்கு கொண்டு சென்று பூஜை செய்ய வேண்டும்.
  6. காவடிகள், தெய்வீகப் படங்கள் மற்றும் பூஜைப் பொருட்களை கால்மிதிபடும் இடங்களில் அல்லது அலட்சியமாக விட்டுச் செல்லக் கூடாது; இது சமய மரபுக்கும் பக்திக்கும் முரணானதாகும்.
  7. தைப்பூச விழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிவது சிறப்பாகும்.
  8. புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  9. காவடி ஆட்டத்தின் போது இழிவான அல்லது தவறான செயல்களில் ஈடுபடாமல், பக்திப் பரவசத்துடன் காவடி சுமந்து ஆட வேண்டும்.
  10. தண்ணீர்பந்தல் அமைத்து அன்னதானம் வழங்கும் பக்தர்கள், இயக்கங்கள் மற்றும் நிறுவனங்களின் சேவை பாராட்டுக்குரியது; அதே நேரத்தில் சுற்றுப்புற தூய்மையை பேணுவதும், நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பதும் அனைவரின் கடமையாகும்.

இந்த புனிதமான தைப்பூச நன்னாளில், திருமுருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் துணைநிற்க, நாம் அனைவரும் சமய நன்னெறி வழியில் பயணித்து, முருகன் அருளைப் பெறுவோம் என்று திரு. தனபாலன் நந்தகுமார் அவர்கள் அறிவுறுத்தினார்.

Scroll to Top