Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

ஒற்றுமையே முன்னேற்றத்தின் வழி – அன்னையர், தந்தையர் தின விழாவில் டத்தோ அன்புமணி பாலன் வலியுறுத்தல்

தேசியத் தளபதி நற்பணி மன்றம் மற்றும் ஐ.பி.எப். கட்சியின் கோலாலங்காட் தொகுதி இணை ஏற்பாட்டில், அன்னையர் மற்றும் தந்தையர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் மூத்த அந்தரங்க செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உரையாற்றிய போது, இந்திய சமுதாயத்தின் ஒற்றுமை மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்து வலியுறுத்தினார்.

இந்தியர்கள் ஒரு குடையின் கீழ் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் எட்டப்படலாம். ஒற்றுமை, நம்பிக்கை, மற்றும் ஒழுங்குமுறை ஆகியவை முன்னேற்றத்துக்கான முக்கிய மூன்று தூண்களாகும்,” என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பல்வேறு சமூக நிகழ்வுகளையும் திட்டங்களையும் நடத்திவரும் டத்தோ பாஸ்கரன் அவர்களுக்கு தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

“கட்சிகள் மாறலாம், தலைவர்கள் மாறலாம், ஆனால் உறவுகள் என்றென்றும் நிலைத்தவை. நான் ஐ.பி.எப். கட்சியுடனும், அதன் சமூகநலப்பணிகளுடனும் நெருக்கமான பயணத்தை பகிர்ந்து கொண்டுள்ளேன். கட்சி மேலும் வலுப்பெற வேண்டும். தேசிய முன்னணியின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக ஐ.பி.எப். கட்சி செயல்படுகிறது. அதேசமயம், இந்திய சமூகத்தினரிடையே ஒற்றுமையையும், ஒருமித்த இயக்கத்தையும் வலுப்படுத்துவது அவசியமாக இருக்கிறது,” என்றார்.

அதனைத் தொடர்ந்து, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தின் வாயிலாக மானியங்கள் பெற்றவர்கள், அந்த ஆதரவைக் கெளரவித்து, சமுதாயத்தின் நலனுக்காக அதை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், “தொழிலாளர், தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சராக பொறுப்பேற்ற டத்தோஸ்ரீ ரமணன் அவர்களின் முயற்சியால் 2007-இல் 30 மில்லியன் மட்டுமே இருந்த தெக்குன் உதவித் திட்டம் இன்று 100 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. இது அவருடைய உறுதியான செயல்திறனை காட்டுகிறது. அவர் சமுதாயத்திற்கு ஒரு சிறந்த தலைவர்,” என்றும் கூறினார்.

இன்றைய சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவுகின்றன. இதனால் குழப்பம் ஏற்படக்கூடும். இதை தவிர்க்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விழா, பெற்றோர் மீது மரியாதையும், சமூக ஒற்றுமையின் அவசியத்தையும் உணர்த்தும் அருமையான நிகழ்வாக அமையப் பெற்றது.

-யாழினி வீரா

Scroll to Top