
கோலாலம்பூர், 9 ஏப்ரல்: பங்சார் சாலையில் நேற்று இரவு நடைபெற்ற நோன்பு பெருநாள் சோதனை நடவடிக்கையில், உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதால் 28 வயது சீன நாட்டு யூடியூபாரின் காரை சாலை போக்குவரத்து துறை (JPJ) பறிமுதல் செய்தது.
கேப்பொங் பகுதியில் உணவகத் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிறகு தம்முடைய காதலியுடன் டமன்சாராவிற்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
மொத்தம் 1,627 வாகனங்களில் 27 பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய JPJ இயக்குநர் ஹமிடி அடம், உரிமம் இல்லாமல் ஓட்டுதல், வாகன பராமரிப்பு குறைபாடுகள், காலவதியான காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 463 சம்மன்ஸ் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்தச் சோதனையில் JPJ, காவல் துறை, குடிவரவு துறை, தேசிய போதைவியல் தடுப்பு முகமை (AADK) உள்ளிட்ட 115 அதிகாரிகள் பங்கேற்றனர். போதை பரிசோதனையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மார்ச் 24 முதல் ஏப்ரல் 8 வரை நடந்த இந்த சிறப்பு சோதனையில் 15,490 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன; 1,729 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையின் நோக்கம், திருநாள் காலங்களில் சாலை பாதுகாப்பை உறுதி செய்வதுடன், விபத்து எண்ணிக்கையை குறைக்குமாறும் ஹமிடி தெரிவித்தார்.
-யாழினி வீரா