Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

முன்னாள் ரெலா உறுப்பினருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை

புத்ராஜெயா, 12 செப்டெம்பர் – 2021 ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், முன்னாள் ரெலா உறுப்பினர் ஓங் சோ லீ (61)க்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டு சிறைத்தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு — தத்துக் ஹாஷிம் ஹம்சா, தத்துக் அஸ்மி அரிஃபின் மற்றும் தத்துக் ஸ்ரீ மொஹ்ட் ஃபிரூஸ் ஜஃப்ரில் — குற்றவாளியின் மேல் முறையீட்டை நிராகரித்தனர். மேலும், பாதிக்கப்பட்டவரின் மருமகனை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட 13 ஆண்டு சிறைத்தண்டனையும் அதேபடி தொடர்கிறது. இரு தண்டனைகளும் ஒரே நேரத்தில் அமுல்படுத்தப்படும்.

2021 ஜூலை 23 அன்று, மராங் மாவட்டம் தாமன் ராயா வகாப் தபாய் பகுதியில் உள்ள சீனக் கோவிலின் பின்புறம் இந்த சம்பவம் நடந்தது. சண்டையின் போது ஓங் துப்பாக்கியால் சுட்டதில், 65 வயதான ஃபொங் ஸ்வீ ஃபுவான் (முன்னாள் எம்.சி.ஏ. மராங் பிரிவு தலைவர்) உயிரிழந்தார். அவரின் மருமகன் டியோ ஹொக் பெங் (48) இடது கையில் காயமடைந்தார்.

ஓங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் குவாலா தெரெங்கானு உயர்நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு 30 ஆண்டு மற்றும் 13 ஆண்டு சிறைத்தண்டனைகள் பெற்றார். மேல் முறையீட்டில், முன்னாள் வழக்கறிஞரின் அறிவுறுத்தலால் தவறாக ஒப்புக்கொண்டதாகவும், மொழி தடைகள் காரணமாக புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறினார். ஆனால், நீதிமன்றம் அவர் மலாய் மொழியைப் புரிந்திருந்ததும், மூன்று வழக்கறிஞர்களின் உதவியுடன் வாக்குமூலம் அளித்ததும் உறுதிப்படுத்தியது.

“இந்த மேல் முறையீடு எந்த அடிப்படையுமற்றது. விதிக்கப்பட்ட தண்டனை சட்டப்படி குறைந்தபட்சம்,” என்று நீதிபதி ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

-யாழினி வீரா

Scroll to Top